அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes In Tamil

1
இன்ப நிலை
இன்ப நிலையையே இயல்பு நிலையாக கொண்டால்,
இவ்வுலகில் எங்கிருந்தாலும் இன்பம் அல்லவா?
இன்றைய நாளே இறுதி நாள் என கொண்டால்,
எல்லையே இல்லையே இன்பத்திற்கு!
இடமே ஏது துன்பத்திற்கு!
எதுவுமே இல்லாமல் இப்பூமிக்கு வந்து
இப்போது இழந்ததை எண்ணி வருந்தலாமோ!?
இருக்கிறதே இன்னும் உயிர் என்று எண்ணி இனியும் திருந்தலாமோ!?
இயங்கிய நிலையில் இப்பூமியே இருக்கையில் தயங்கிய நிலை உனக்கெதற்கு!
பணத்தையும், புகழையும் கொண்டே மயங்கிய உன்னையும் என்னையும்,
இனி மறைப்பது எதற்கு!?
பயிரற்ற வயலுக்கு தான் மதிப்பு இருக்கா!
உயிரற்ற உடலுக்கு தான் மதிப்பு
இருக்கா!
இன்பத்திற்கு ஏங்கி தானே உயிரே இங்கு வாழுது!..
நாள்தோறும் இன்பத்தை தானே தேடுது!..
இன்ப நிலையையே
இறுதி நிலை என கொண்டால் இருந்தாலும் இன்பம்,
இறந்தாலும் இன்பம்!!
தானே!?
மானுடா!
இதை மறப்பது ஏனடா!?
2
அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes In Tamil
அலுவலகம்
கருவுலகம் கூட பத்து மாதம் தான், ஆனால்
அலுவலகம் பாதி ஆயுள் அல்லவா தொடர்கிறது!
நிரந்தர பணியும் இல்லை!
அப்படி நிரந்தரம் என்றாலும் நிம்மதியும் இல்லை,
உழைப்பை முழுதாக கொடுத்தாலும், பிழைப்பை அலுவலகத்தை நம்பி அல்லவா இருக்கிறோம்!
நம்முடைய நேரத்தை அங்கே தானே அதிகம் செலவிடுகிறோம்!
ஒரு நாள் ஊதியம், ஓய்வுக்கு இல்லை சாத்தியம்,
இதை எங்கும் செய்யலாம் சத்தியம்!!
புத்தியையும் மேம்படுத்தாமல்,
சக்தியையும்
மேம்படுத்தாமல்,
நித்தமும்,
உடலாலும் மனதாலும் உழைத்து வாழ அல்லவா மறக்கிறோம்!
வாழ வேண்டிய வாழ்க்கையை அலுவலகத்திலே, தொலைக்கிறோம்!
நாள் தோறும் பாரத்தை நெஞ்சினிலே சுமக்கிறோம்!
இதற்கு மட்டும் தானா பிறக்கிறோம்!?
சிந்தியுங்கள்!
சிறகடிக்க ஆசை இருந்தால்!
செல்லுங்கள்!
அலுவலகத்திற்கு
சிறைபிடிக்க ஆசை இருந்தால்!!
சில்லறையை
சிதற விட்டு!
கல்லறை
வரை விரட்டும் பணி தான் அலுவலகம்!
அலுவலகத்தையும் தாண்டி,
ஊர் உலகம்!
தயாராகவே இருக்கிறது,
உங்கள் வரவை எதிர்பார்த்து!
காலடி எடுத்து வையுங்கள்!
உங்களுடைய வாழ்க்கை எனும் அலுவலகத்தில்!!
3
அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes In Tamil
நாடோடிகள்
சொந்தம் என்று சொல்லி கொள்ள எதுவும் இல்லாமலேயே!
சொந்த வீடு, சொந்த நாடு கூட நிரந்தரம் இல்லாமல் உயிர் ஒன்றை மட்டும் உடலில் வைத்து,
ஓடி ஓடி திரிந்து, உணவுக்காக அலைந்து, ஊருராய் சென்று,
தவித்து வரும் நிலையிலும்,
முகத்தில் சிரிப்புடன் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கும் எத்தனையோ மக்கள் நம்முடன் தான் வாழ்கின்றனர்!
அதுவும் ஒரு வகை துறவு வாழ்க்கையே,
எதன் மீதும் பற்று இல்லாமல், யார் மீதும் பொறாமை இல்லாமல்,,
தேவையில்லாத போட்டி இல்லாமல்
அன்றைய தேவைக்கு அமைதியாக வாழ பழகும் அற்புதமான மனித வாழ்க்கை அல்லவா அது!
அவர்கள் வரலாறு படைக்க தேவை இல்லை, ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையே வரலாறு தான்!!
சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சங்கட படும் நமக்கு தெரிவதில்லை!
சங்கடமான நிலையிலும் சந்தோஷமாக இருக்கலாம் என்று!!
அற்ப பணத்துக்காகவும், அல்ப சுகத்துக்காகவும்,
அலைந்து கொண்டு அழிந்து போகும்!
மனித இனம் அல்லவா நாம்!!
வாழ கற்றுக் கொள்ளாமலே வாழ்ந்து முடித்து விட்டோம்!
வாழ்ந்து என்ன பயன் என்பதை உணராமலேயே!
*நாமும் நாடோடிகள் தான்!!*,
வந்து, வாழ்ந்து, அழிந்து போகும் அர்த்தம் இல்லா நாடோடிகள்!!
4
அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes In Tamil
புறப்படும் நேரம்
புதிதாக பிறந்து, பரிவாக வளர்ந்து,
புன்னகை மலர்ந்து,
பாசங்கள் தெரிந்து,
பாடங்கள் புரிந்து,
பாதைகள் கடந்து,
பலவற்றை பிரிந்து,
பகையை மறந்து,
பணியைத் தொடர்ந்து,
பெரும் மழையில் நனைந்து,
பல்வேறு வேதனைகளுடன்
கலந்து,
பலமான உடலை இழந்து,
பக்குவமான நிலையை அடைந்து,
பயிற்சி மூலம் கற்று
தெளிந்து,
பணம் முழுவதும் தீர்ந்து,
பாதம் வரை தேய்ந்து,
பதவி எல்லாம் ஒழிந்து,
பாரம் எல்லாம் குறைந்து,
பாறை போல்
திடமாக இருந்து,
பனி போல் அழகாக படர்ந்து,
பாலான வாழ்க்கையை துறந்து,
பலமான சிறையின் பூட்டை திறந்து,
பறவைகள் போல பறந்து!!
பாதியில் புறப்படும் நேரம் வந்து விட்டது…என்றாலும் இன்னும் புலப்படவில்லை வாழ்க்கை!
5
அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes In Tamil
மௌனம்
எல்லா சூழ்நிலைக்கும் தகுந்த மொழி மௌனம்!
பல வார்த்தைகளை மனதுக்குள் புதைத்து வைக்கும் தந்திரம் மௌனம்!
எதிரிகளுக்காக வாயில் எடுக்கும் ஆயுதம் மௌனம்!
வெறுப்பை விவரிக்காமல் கடந்து செல்ல உதவும் மௌனம்!
என்ன! மௌனம் பேசும் வார்த்தைகள் தான் ஆயிரம்!!
மௌனம் சிந்திக்கும் சிந்தனை தான் லட்சம்!!
மௌனம் சொல்லும் பாடம் தான் கோடி!!
ஊமையாய் பிறப்பதற்கும்,
பேச வந்தும், ஊமையாய் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு!
மௌனம் எனும் ஆடை அணிந்து திரிந்திடுங்கள்!
மௌனம் எனும் மதிப்பு உணர்ந்து
திருந்திடுங்கள்!
மௌனம் எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்திருங்கள்!
மௌனம் என்ற கேள்விக்கு காயம் பதில் சொல்லும்!
மௌனம் என்ற விடைக்கு காலம் பதில் சொல்லும்!
மௌனம் ஒரு மந்திரம்!
தீமையை அகற்றும் தந்திரம்!!
6
அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes In Tamil
அழுகை
முதலிலும் அழுகை!
முடிவிலும் அழுகை!
இன்பத்திலும், துன்பத்திலும்
முதல் இடம் பிடிக்கும்!
மனதில் உள்ள கவலை அழிக்கும்!
சோகம் பல இருக்கும்!
பாரம் பல இறக்கும்!
கறைகள் பல துடைக்கும்!
ஏழைகள் என்றால் மிகவும் பிடிக்கும்!
நொந்து மனம் போகையில்,
வந்து வந்து போகும்!
வாழ்ந்து வரும் போதெல்லாம் அழுகையை கடந்து வந்தாக வேண்டும்!
வான் அழுதால் மழை!
கடல் அழுதால் பிழை!
மழலையின் அழுகை மனதிலே இடம் பிடிக்கும்!
முதுமையில் அழுகை மரணத்திலே இடம் அளிக்கும்!
உலகிற்கு அமைதி தரும் அமுது!
உணர்வுக்கு நிம்மதி தரும் அரு மருந்து!
அழுகையும் இறைவன் அளித்த சலுகையே என்பேன்!
இருப்பதற்கும்!
இறப்பதற்கும்!!
கண்ணில் ஊற்றெடுக்கும்
கடல் நீர்!
இமையில் இளைப்பாறும் கானல் நீர்!
வந்து தவழும்
நெஞ்சில்!
சேர்ந்து
விழும்
மண்ணில்!!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்














