விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதைகள் | Vinayagar Chaturthi Wishes in Tamil

அகில உலகின் அதிபதியே,
எம் கணபதியே!
ஏழைகளின் இறைவனே,
எம் துணைவனே!
ஞானத்திருவுறுவே, எம் குருவடிவே!
யானை முகத்தோனே,
தூய அகத்தோனே!
அரசமர அரசே,
அனைவரின் பரிசே!
உனை வணங்கி தொடங்கினால் எல்லாம் ஜெயமே!
உனை நின்று வணங்கினால் நித்தமும் சுபமே!
சித்தருக்கெல்லாம் சித்தியே,
காரிய நிவர்த்தியே!
எங்கள் வாழ்வின் கீர்த்தியே,
புண்ணிய மூர்த்தியே!

அருகம்புல்லின் அசைவே!
இனிய காற்றின் இசையே!
களிமண்ணில் உருவான கனியே!
எங்கள் துன்பம் துடைக்க வந்த
தும்பப்பூ மலரே!
மரகத மணியே,
மணிச்சுடர் ஒளியே!
மஞ்சள் பூசிய மேனியே,
மகிழ்வின் வாசனை நீயே!
விநாயக திருமகனே விடை தருவாய் அப்பனே!

என் விழியெல்லாம் உன் முகம் கொண்டேன்,
என் வழியெல்லாம்
நல்வழி கண்டேன்!
என் உற்ற துணையாக நீ இருக்க,
மற்றதற்கு பயம் எதற்கு!
என் உறவுக்கு பால் வார்த்தேன்,
என் மனதிலே தீ வளர்த்தேன்!
உனக்கொரு சுடரேற்ற,
எம் வாழ்வை முன்னேற்ற!
கொம்பனையும் கம்பனாக மாற்றிய வல்லவனே,
தமிழ் மொழியின் வள்ளுவனே!
எனை ஆளும் ஆண்டவனே,
எம் விநாயக பெருமானே!
ஒன்றுமில்லாதவர்க்கும் ஒரு சொந்தம் உண்டு,
உன்னிடம் ஒரு பந்தம் உண்டு என புரிய வைத்தாய், உனை அணைத்தவனுக்கே ஒரு ஆனந்தம் உண்டு என அறிய வைத்தாய்!
பூஜ்யத்தில் இருப்பவனும் உன்னை பூஜிக்கலாம்,
ராஜ்யத்தில் இருப்பவனும் உன்னை பூஜிக்கலாம்,
ஆனால் உன் நின்அருள் எனுமோ சமமே!
உன்னுள் ஆசை கொண்டதனால்,
உலகையே சொந்தமாக கொண்டேன்,
எம் திருவடிவே!
எங்கள் துயர் துடைக்க வந்த தூயவனே!
மனம் தூய்மையாக்க வந்த தூதுவனே!
அரசமர கடவுளே, அகிம்சை வழி வந்த பிரபுவே!
கற்பூர புத்தி கொண்ட கற்பூர கணபதியே!
தொப்பைக்கும் அழகு சேர்க்கும் தொந்தி கணபதியே!
கொழுக்கட்டையை விரும்பும் கொள்கை கணபதியே!
எலியை வாகனமக கொண்ட எளிய கணபதியே!

நாளும் வேண்டும் உன் அருள்!
நாடும் வேண்டுது உன் திருவருள் பெற!
வாராய் அப்பனே விநாயகா!
பாராய் அப்பனே
விநாயகா!
நல்வழி தாராய் அப்பனே விநாயகா!
உன் உயர் உள்ளம் கொண்டு காப்பாய் அப்பனே விநாயகா!
தாய் தந்தையரே நம் உலகம் என்றுரைத்த விநாயகா!
தனித்திருப்பது
தான் நம் தகுதியை வளர்க்கும் என்று புகட்டிய விநாயகா!
அனுபவமே நம்மை கட்டியமைக்கும் அஸ்திவாரம் என்று
காட்டிய விநாயகா!
எல்லா வினாக்களுக்கும் காலத்தின் மூலம் விடை தருவாயே விநாயகா!
சிகரம் தொடும் சிந்தனையை என் மனதில் விதைத்த விநாயகா!
சூரியன் போல் என்றும் என் மனதில் உதித்த
விநாயகா!
பேராற்றலும் பெருவாழ்வும் தந்து அருள் புரிவாயே
விநாயகா!
நான் விழி மூடும் வரை உன்னையே துதிப்பேன் விநாயகா!
சிவனின் மகனான உன்னை துதிப்பதனால்
எமனும் நெருங்கவில்லை என்னை!
எத்தனை பாதிப்புகள் என்னை ஆட்கொண்டாலும் உன் சந்திப்பு ஒன்றே தீர்வு!

ஒவ்வொரு நாளும் இனிய தொடக்கமே உன்னை வணங்கி வருவதானால்!
உறக்கம் தொலைத்த உடலுக்கு உன் துதி ஒன்றே மருந்து!
நான் புதை மணலில் புதையுண்டாலும் என் புத்தி முழுதும் நீயே அப்பனே!
நான் கதை எழுதும் காவியத்திற்கு விதை எனுமோ நீயே அப்பனே!
சிந்தைக்குள் ஒரு விந்தை புரிய வந்தாய்!
பக்தி வழியாக புது சக்தி தந்தாய் அப்பனே விநாயகா!
பாவப்பட்ட எனக்கு உன் கருணை பார்வை கொண்டு பரிசளித்தாயே விநாயகா!
காயம்பட்ட எனக்கு உற்ற துணையாக அனுதினமும் நின்று ஆறுதல் அளித்தாயே விநாயகா!
தோல்வினால் துவண்டு விழும் போதெல்லாம் தேற்றி விட்டாயே விநாயகா!
என்ன தான் விதி சதி செய்தாலும் மதி கொண்டு வெற்றிப்படி ஏற்றி விட்டாயே விநாயகா!
பாவிகள் என்னை சூழ்ந்ததினால் அதிலிருந்து பிரித்து தனித்து விட்டாயே விநாயகா!

நட்பையே பெரும் கொடையாய் அளித்தாயே விநாயகா!
நல் உறவையே
படையாய் அளித்தாய். விநாயகா!
உன் துதியே பாடுகிறேன்!
உனை போற்றியே ஓடுகிறேன்!
உன் அன்பையே தேடுகிறேன்!
உனை காணாமலே வாடுகிறேன்!
என் இறைவா!
எம் விநாயகா!

பேராசை எனும் பாரத்தை என்னுள் இருந்து இறக்கி வைத்தாய்!
பொறாமை எனும் தீய எண்ணத்தை என்னுள் இருந்து பொசுக்கி விட்டாய்!
பொறுமை எனும் பெருமையை என்னுள் நிலைக்க வைத்தாய்!
வறுமை எனும் நோயை என் வாழ்வில் விரட்டி விட்டாய்!
என் அப்பனே விநாயகா!
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் சம நிலையில் ஏற்றுக்கொள் என்றாய்!
உனக்கொரு தேங்காய் உடைத்தேன்!
சிதறிய தேங்காய் சில்லாய் என் சிக்கலை தீர்த்து வைத்தாய்!
கடும் வெயிலிலும். தாகம் தனிய கற்றுக் கொண்டேன்!
கடும் மழையிலும் தேகம் நனைய,
பொறுத்துக் கொண்டேன்!
கடும் வலியிலும் சோகம் தீர, வழி அதனை பெற்று கொண்டேன்!
உடல் மெலிந்து உள்ளம் வெறுத்தாலும்,
உயிர் நிலைப்பதை அறிந்து, உணர்ந்து கொண்டேன் வாழ்க்கையை!
என் இறைவா!
எம் விநாயகா!
பாகம் பிரிக்க சொத்து சண்டை வந்த போதும்,
உற்ற நண்பன் முதுகில் குத்திய போதும்,
ஊரே என்னை ஒதுக்கிய போதும்,
குடும்பத்தை கடும் துன்பம் வாட்டிய போதும்,
நான் அமைதியாக கடந்த போது, அது தான் அறிவு என்றாய்!
ஆனை முகனே!
மாமருந்தே!
உனக்கொரு கோயில் கட்டும் முன்னே! எனக்கொரு கோயில் கட்டி கொடை அளித்தாய்!
என் உள்ளத்திலே உன் இல்லம் அமைத்தாய்!
முடங்கி கிடந்த என்னை முட்டி தூக்கி முன் நிறுத்தி,
முன்னேற வைத்தாய்!
தலை கணம் இல்லாமலே என் தகுதியை வளர்த்தாய்!
என் இறைவா!
எம் விநாயகா!
சொல் புத்தி கொண்டும்,
சுய புத்தி கொண்டும்,
பிழைக்க வைத்தாய்!
நான் பட்ட வலியெல்லாம் நன்மை என்றாய்,
நான் சேர்த்த சொந்தம் நண்பன் என்றாய்!
வைரம் பாய்ந்த கட்டையாய், எனை மாற்றி,
வைரத்தை விட உயர்ந்த வைராக்கியத்தை என்னுள் விதைத்தாய்!
உடலையும், உயிரையும்,
மறந்த நிலையே உண்மை நிலை என்றாய்!
உலகத்தில் உனக்கு பங்கில்லை!,
என்
உள்ளத்திலே உனக்கொரு பங்கு உண்டு என்று உரைத்து,
உலகையே நேசிக்க வைத்து,
ஞான, உபதேசம் செய்தாய்!
உன்னை மறவேனே!
என் இறைவனே!
அற்புதமான அழகால்,
ஆனந்த கூத்தாடும் திரு வடிவே!
இனியும் ஏறுவேன் வெற்றி படிக்கட்டில்!
நெஞ்சு கூட்டுக்குள் நித்தமும் உனை நிறுத்தி ஏற்றுவேன்!
ஒளி விளக்கை!
ஓயாமலே!!
அப்படி ஒரு நாள் உடல் சாய்ந்ததாலும்!
என்
உள்ளத்தில் எழும் மணி விளக்கு!
மாட விளக்கு!
மரணம் அடையாத மதி விளக்கு!!
என் இறைவா!
எம் விநாயகா!
உன் உயர் உள்ளம் கொண்டு,
உனை வணங்கி மகிழ்கிறேன் உனை வாழ்நாள் முழுவதும்!
என் இறைவா!
எம் சர்வ சக்தி விநாயகா!
எம் வித்யா விநாயகா!
எம் சித்தி விநாயகா!
போற்றி! போற்றி!
என் உயிரில் கலந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உள்ளம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
நல்ல எண்ணமே ஜெயம்!
நன்றி!!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
TAMIL KAVITHAI